பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா : யு19 உலகக் கோப்பை ஃபைனலில் அசத்தலாக நுழைந்தது
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்று வரும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி, முகமது ஹுரைரா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணி தொடக்கத்திலே இரண்டு விக்கெட்களை வீழ்த்தியது. ஹுரைரா 4, ஃபகத் முனிர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஹைதர் அலியுடன், ரோஹைல் நஸிர் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
ஹைதர் அலி 56 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணியின் சரிவு தொடங்கியது. மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த நஸிர் 62 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். முகமது ஹரிஸ் மட்டும் 21 ரன்கள் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 43.1 ஓவரில் பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் மிஸ்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். கார்த்திக் தியாகி, ரவி பிஸ்னோய் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. இந்திய அணியில் திவ்யான்ஷ் சஸேனா, யஷாஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
பின்னர், 10 ஓவர்களுக்கு மேல் இருவரும் அடித்து விளையாடினர். இருவரும் அரைசதம் அடித்தனர். இருவரின் விக்கெட்டை வீழ்த்த பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்தனர். ஆனால், இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இருவரும் விக்கெட்டை பறிகொடுக்காமல் இறுதிவரை ஆட்டத்தை கொண்டு சென்றனர். சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சிக்ஸர் விளாசி சதம் அடித்தார். இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சக்ஸேனா 59 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 105 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.