சாம்பியன்ஸ் டிராஃபி: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்காவுடனான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
லண்டனில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை எதிர் கொண்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 44.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் டீ காக் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடி 53 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார், பூம்ரா தலா இரண்டு விக்கெட்களையும் அஸ்வின், பாண்ட்யா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா 12 ரன்களில் அவுட் ஆனார். ஷிகர் தவான் 78 ரன்களை குவித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய விராட் கோஃலியும், யுவராஜ் சிங்கும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை எட்டினர். இதன்மூலம் 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. தவான் 78 ரன்களும், விராட் கோஃஹ்லி 76 ரன்களும், யுவராஜ் சிங் 23 ரன்களும் எடுத்தனர்.
அரையிறுதியில், ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேச அணியுடன் இந்திய அணி மோத உள்ளது.