சீனியர்கள் இல்லாமல் களமிறங்கும் ஹர்திக் தலைமையிலான இளம் படை - நியூசி, தொடர் ஓர் பார்வை!

சீனியர்கள் இல்லாமல் களமிறங்கும் ஹர்திக் தலைமையிலான இளம் படை - நியூசி, தொடர் ஓர் பார்வை!
சீனியர்கள் இல்லாமல் களமிறங்கும் ஹர்திக் தலைமையிலான இளம் படை - நியூசி, தொடர் ஓர் பார்வை!

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும், அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த இரு தொடர்களிலும், இந்திய அணியில் இருக்கும் மாற்றங்கள் மற்றும் போட்டிகள் குறித்த நிலவரத்தை காணலாம்.

முதலிடம் பிடித்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத சோகம்!

ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 மற்றும் குரூப் 2 பிரிவில், முதலிடம் பிடித்த அணிகளான நியூசிலாந்து மற்றும் இந்தியா, அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறின. இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தாலும், அங்கிருந்து அப்படியே சில வீரர்களை தவிர இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பங்குபெறவுள்ளது.

இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு

இந்த இரு தொடர்களிலும், தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட், கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக சிகிச்சை எடுத்து வரும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இடம் பெறவில்லை. அத்துடன் டி20 உலகக் கோப்பையில் இடம் பிடித்த மூத்த வீரர்களான தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி ஆகியோரும் கழட்டிவிடப்பட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி!

இந்திய அணியின் 3 வடிவப் போட்டிகளுக்கும் கேப்டனான ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், ஒரு நாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, மூத்த வீரரான ஷிகார் தவான் கேப்டனாக செயல்பட உள்ளார். இரு தொடர்களிலுமே, இளம் வீரர்கள் அதிகமாக களமிறக்கப்பட உள்ளனர். சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமாரை தவிர மூத்த வீரர்கள் என்று பெரிதாக யாருமில்லை.

லஷ்மண் தற்காலிக பயிற்சியாளர்!

தற்காலிக தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை தோல்விக்கு இளம் வீரர்கள் இல்லாதது, ராகுல் டிராவிட் மற்றும் ரோகித்தின் தலைமை சரியில்லாதது என பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் கிளம்பின. குறிப்பாக துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுலின் பேட்டிங் ரசிகர்களை மிகவும் சோர்வடைய செய்தது.

வில்லியம்சன் தான் கேப்டன்.. ஆனால்?

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கோப்பை வென்று நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் நியூசிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரு தொடர்களுக்குமே கேன் வில்லியம்சன் தான் தலைமை தாங்குகிறார். இதனால் இரண்டு தொடர்களையும் வெல்லப்போவது யார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த டி20 தொடரில் ஒருவேளை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் படை வெற்றிபெற்றால், அதுவே ஆரம்பப்புள்ளியாக அமைந்து அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்வதில் பிசிசிஐ-க்கு உள்ள நெருக்கடிகள் குறைந்து பெரியளவில் கைக்கொடுக்கும்.

நவ.18ல் முதல் போட்டி!

முதல் டி20 போட்டி நவம்பர் 18-ம் தேதி வெலிங்டன் மைதானத்திலும், இரண்டாவது டி20 போட்டியானது நவம்பர் 20-ம் தேதி மவுன்ட் மாங்கனியிலும், மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 22-ம் தேதி நேப்பியரிலும் நடைபெற இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளுமே இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 25-ம் தேதி ஆக்லாந்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 27-ம் தேதி ஹாமில்டனிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி நவம்பர் 30-ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சிலும் நடைபெற உள்ளது. இந்த மூன்று போட்டிகளுமே இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டி20 அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த் (துணைக் கேப்டன், விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

இந்திய ஒருநாள் அணி:

ஷிகார் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், குல்தீப் சென்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com