ஆஸிக்கு எதிரான 3-வது டெஸ்ட்... நிதான ஆட்டத்தில் இந்தியா..!
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்றுள்ளன. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. பின் பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதனால் தற்போது தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடைப்பெறுகிறது.
கிறிஸ்துமஸூக்கு மறுநாள் நடக்கும் இந்த ’பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி இன்று காலை 5 மணிக்கு மெல்போர்ன் நகரில் தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு விஹாரியும், மயங்க் அகர்வாலும் சேர்க்கப்பட்டனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அறிமுக வீரர் மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். துவக்க ஆட்டக்காரர்ரான விஹாரி 8 ரன் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஃபின்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாராவும், மயங்க் அகர்வாலும் நன்றாக ஆடிக் கொண்டிருந்தனர். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீரர் மயங்க் அகர்வால் அபாரமாக ஆடி அரைசதத்தை தாண்டினார். பின் அவர் 76 ரன் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து விராட் கோலி களமிறங்கிய நிலையில் இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது. சற்று முன் வரை 63.1 ஓவர் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளதால் இன்று தொடங்கியுள்ள 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.