வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி தேர்வு தள்ளி வைப்பு
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு, திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியை, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு, மும்பையில் இன்று கூடி தேர்வு செய்யும் என்று கூறப்பட்டிருந்தது. அனுபவ வீரர் தோனியின் எதிர்காலம், தொடரில் கேப்டன் விராத் கோலி, பும்ராவுக்கான ஓய்வு, உலகக் கோப்பை தோல்வி யை அடுத்து அணியில் மாற்றங்கள் போன்ற விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்திய அணி தேர்வு, திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்படுகிறது.
காயத்தில் சிக்கிய சில வீரர்களின் உடல்தகுதி அறிக்கை, சனிக்கிழமை மாலைதான் கிடைக்கும் என்பதாலும் தேர்வுக் குழுவின் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு உத்தரவிட்டதைத் தொடர்ந்தும் அணி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.