தவானுக்கு பதிலாக களமிறங்குகிறாரா தினேஷ் கார்த்திக் ? இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டங்களில் பலம் வாய்ந்த தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வென்றுள்ளது. முந்தைய போட்டியில் சதம் அடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஷிகர் தவானின், காயம் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. தவானுக்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
முதல் ஆட்டத்தில் சதம் விளாசிய ரோகித் ஷர்மாவுடன், கேப்டன் விராட் கோலி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு வலுசேர்க்கின்றனர். நடுகள வரிசையில் கேதர் ஜாதவும், தோனியும் அதிரடி காட்ட காத்திருக்கின்றனர். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் யஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் பக்கபலமாக இருக்கின்றனர்.
அதேபோல கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், காலின் மன்ரோ ஆகியோர் பேட்டிங்கில் கை கொடுக்கின்றனர். பந்துவீச்சில் ஃபெர்குசன், மேட் ஹென்றி, டிரெண்ட் பவுல்ட், ஜிம்மி நீஷம் கூட்டணி விக்கெட் வேட்டை நடத்தி வருகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தியுள்ள நியூசிலாந்து அணிக்கு உண்மையான பலப்பரீட்சை இந்தியா உடனான போட்டியில் தான் தொடங்குகிறது. எனினும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை வென்ற உற்சாகத்தில் நியூசிலாந்து அணி களம் காண்கிறது.