விராட், ரோகித் போராட்டம் வீண் - இங்கிலாந்து அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மிகுந்த பரபரப்புக்கு நடுவே இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 337 ரன்கள் குவித்தது. பேர்ஸ்டோவ் 111, ஸ்டோக்ஸ் 79, ராய் 66 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட் சாய்த்தார்.
இதனையடுத்து, 338 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 9 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி சிறப்பாக விளையாடியது. விராட் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடி 109 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் 32 எடுத்து வெளியேறினார்.
கொஞ்ச நேரம் நம்பிக்கை அளித்த ஹர்திக் பாண்ட்யா 41 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தோனியும், கேதர் ஜாதவும் 50 ஓவர்களை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே விளையாடினர். இது ரசிகர்களை சற்று டென்ஷன் ஆக்கியது. 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பு 306 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தோனி 42, கேதர் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணியில் பிளங்கட் 3, வோக்ஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.