”ஆப்கன் அணியை இந்தியா ஆதரிக்கக் கூடாது” - வீராங்கனை மார்ஸி ஹமீதி வலியுறுத்தல்
ஆப்கனிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஆப்கனைச் சேர்ந்த டேக்வாண்டோ சாம்பியன் மார்ஸியே ஹமீதி வலியுறுத்தியுள்ளார். 2021இல் ஆப்கன் ஆட்சியை தாலிபான் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து வெளியேறி ஃபிரான்ஸில் தஞ்சம் புகுந்துள்ளார் ஹமீதி. தாலிபான் ஆட்சியில் ஆப்கனில் கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டுகளிலும் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்துகொண்டிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது ஆப்கன் ஆடவர் கிரிக்கெட் அணி.
தாலிபான் ஆட்சி அமைவதற்கு முன் ஆப்கன் மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பல வகைகளில் இந்தியா உதவி செய்துள்ளதை ஹமீதி நினைவுகூர்ந்துள்ளார். கறுப்பின மக்கள் மீது கடந்த காலத்தில் இனஒதுக்குதல் கொள்கையைக் கடைபிடித்த தென் ஆப்ரிக்கா, கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அதேபோல் பாலினரீதியான ஒதுக்குதலைக் கடைபிடிக்கும் ஆப்கனின் அணிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதிக்க வேண்டும் என்று ஹமீதி கூறியுள்ளார். இதற்காக அவருக்கு பலரிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.