ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டி: முதல் பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா!
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நந்தினி தனது பவர்ஃபுல் பன்ச் மூலம் தற்போது நடைபெற்று வரும் ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மூன்றே சுற்றில் கஜகஸ்தானின் வலேரியா ஆக்செனோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் மொகாலியை சேர்ந்த இந்த 21 வயது வீராங்கனை.
மகளீருக்கான 81 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதி போட்டியில் நந்தினி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்த பிரிவில் டாப் 4 வீராங்கனைகளில் ஒருவராக அவர் இணைந்துள்ள காரணத்தால் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளார்.
நடப்பு தேசிய சாம்பியனான நந்தினி, அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியனும் 2021 ஆசிய சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றவருமான கஜகஸ்தான் நாட்டின் மற்றொரு குத்துச்சண்டை வீராங்கனை லசாத் குங்கேபயேவாவை எதிர்கொள்கிறார்.
ஆண்டுதோறும் பல்கேரியாவில் நடைபெறும் ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை தொடரின் நடப்பு சீசனில் சுமார் 36 நாடுகளை சேர்ந்த 450 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 7 வீரர்கள் மற்றும் 10 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

