‘இது மறக்க முடியாத பயணம்’: விடைபெற்றார் நெஹ்ரா!
இந்திய அணிக்காக அதிக முறை கடைசி ஓவரை வீசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன் என்று வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா சொன்னார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் 38 வயதான ஆசிஷ் நெஹ்ரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடந்த முதல் டி20 போட்டியுடன் அவர் விடைபெற்றார். இந்தப் போட்டியில் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் வெற்றியுடன் விடைபெற்றார். மைதானத்தில் கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவருக்கு கைகளைத் தட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர் பேசிய நெஹ்ரா,’ கடந்த சில நாட்களுக்கு முன் இன்னும் இரண்டு ஆண்டுகள் என்னால் விளையாட முடியும் என்று சொல்லியிருந்தேன். ஆனால் ஓய்வு பெற இதுதான் சரியான தருணம். இதைவிட சரியான தருணம் இருக்க முடியாது. இந்திய அணிக்காக அதிக முறை, கடைசி ஓவரை வீசிய பந்துவீச்சாளர் என்ற பெருமை எனக்கு இருக்கிறது. இந்தப் போட்டியிலும் அது நடந்திருக்கிறது. கடந்த 18 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறேன். இதைவிட வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். இது மறக்க முடியாத பயணம்’ என்றார்.