‘கவாஸ்கர்’ எனும் சகாப்தம் - இன்று 70வது பிறந்த தினம்
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கரின் 70வது பிறந்த தினம் இன்றாகும்.
1970-களில் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என சுனில் கவாஸ்கரை கூறலாம். 1949ஆம் ஆண்டு பிறந்த கவாஸ்கரை, பிறந்த அடுத்த தினமே மருத்துவமனையில் காணவில்லை. இதையடுத்து கவாஸ்கரை தீவிரமாக தேடிய அவரது மாமா, ஒரு மீனவப் பெண்ணின் அருகே தூங்கிக்கொண்டிருந்த கவாஸ்கரை கண்டுபிடித்தார். குழந்தை மாறுபாட்டில் குழப்பம் ஏற்பட்டது பின்னர் தெரியவந்தது.
கவாஸ்கர் சிறுவயதில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என விரும்பவில்லை. அவர் பிரபல மல்யுத்த வீரர் மாருதி வதார் போன்று ஆக வேண்டும் என நினைத்துள்ளார். ஆனால் கவாஸ்கரின் குடும்பம் ஒரு கிரிக்கெட் குடும்பம் என்பதால், அவர் கிரிக்கெட்டிற்குள் தள்ளப்பட்டார். கவாஸ்கரின் மாமா மாதவ் மந்திரி இந்தியாவிற்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கவாஸ்கரின் மைத்துனர் ஜி.ஆர். விஸ்வநாதன் இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆவார். கவாஸ்கரின் தொடர்ச்சியாக அவரது மகன் ரோஹன் 11 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கவாஸ்கரின் சகோதரி நுாதன் மும்பையில் உள்ள பெண்கள் கிரிக்கெட் கிளப்பில் விளையாடிவர்.
பள்ளிப்பருவத்தின் போது கவாஸ்கர் கிரிக்கெட்டில் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனால் 12ஆம் வகுப்பில் அவரது கிரிக்கெட் லைட் பளிச்சென்று எரிந்தது. அந்த வருடத்தில் (1966) அவர் 246*, 222 மற்றும் 85 ரன்களை குவித்தார். இதனால் இந்தியாவின் சிறந்த பள்ளிப்பருவ கிரிக்கெட்டர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் லண்டன் பள்ளி மாணவர்களுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
அதன்பின்னர் 1968ஆம் ஆண்டு கர்நாடகாவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய அவர் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகினார். ஒருவழியாக 1971ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் 65 மற்றும் 67* ரன்கள் எடுத்து தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
இதன்பின்னர் அவர் கண்ட வளர்ச்சி அபாரமானது. கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 10,122 ரன்களை கடந்தார். இதன்மூலம் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,092 ரன்கள் எடுத்தார்.
உள்ளூர் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளராகவும் இருந்த கவாஸ்கருக்கு, சர்வதேச போட்டிகளில் அதனை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் ஸ்லிப்பில் ஃபீல்டிங் நின்ற அவர் 100 கேட்ச்களுக்கு மேல் பிடித்து சாதனை படைத்தார். மொத்தம் 108 கேட்ச்கள். பல்வேறு சாதனைகளையும், இந்தியாவிற்குப் பல வெற்றிகளையும் பெற்றுத்தந்த அவர் 1987ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.