உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இந்தியா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இந்தியா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 2-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப்பெற்றது. இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 69.7 சதவிகிதத்துடன், 460 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தி வருகிறது. 2019 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த லீக்கில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 9 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஆறு அணிகளோடு டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும்.

அதில் மூன்று தொடர் சொந்த மண்ணிலும், மூன்று தொடர் அயல்நாடுகளிலும் விளையாட வேண்டும் என்பது நிபந்தனை. அந்த தொடர்கள் இரண்டு முதல் ஐந்து போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர்களாக இருக்க வேண்டும். அதில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணி வரும் ஜூன் 2021இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் என அறிவித்தது ஐசிசி.

இப்போது அந்தப் பட்டியலில் நியூசிலாந்து அணி 70 சதவிகிதத்துடன் 420 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டியில் விளையாடுவதையும் அந்த அணி உறுதி செய்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக இப்போது இறுதி போட்டியில் விளையாடப் போவது யார் என்பதற்குதான் இப்போது போட்டா போட்டி நடக்கிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதி விளையாடும் 4 போட்டிகள் கொண்ட நடப்பு டெஸ்ட் தொடர்தான் இறுதி போட்டியில் விளையாடப் போகும் மற்றொரு அணி எது என்பதை உறுதி செய்யும் DECIDER தொடராக அமைந்துள்ளது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது சற்று பின்னடைவாக இருந்தது. ஆனால் இப்போது இரண்டாவது போட்டியில் வெற்றிப்பெற்று சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்புக்கான ரேசில் தனது இடத்தை உறுதி செய்தது இந்தியா. இந்தத் தொடரை இந்தியா 3-1, 2-1 என்று வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி இடத்தை உறுதி செய்யும். அதேவேளையில் இங்கிலாந்து 3-1 என வென்றால் அந்த அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com