“இந்தியாக்கு All Rounders தேவை; அதற்கு தமிழகத்திலிருந்து வீரர்கள் வரவேண்டும்!”-எல் பாலாஜி

“இந்தியாக்கு All Rounders தேவை; அதற்கு தமிழகத்திலிருந்து வீரர்கள் வரவேண்டும்!”-எல் பாலாஜி
“இந்தியாக்கு All Rounders தேவை; அதற்கு தமிழகத்திலிருந்து வீரர்கள் வரவேண்டும்!”-எல் பாலாஜி

கிரிக்கெட் போட்டிகள் தற்போது கிராமங்களிலும் அதிகமாக வளர்ந்துள்ளதாக நெல்லையில் தொடங்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பிலான கிரிக்கெட் அகாடமி நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எல் பாலாஜி பேசியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சார்பிலான கிரிக்கெட் அகாடமி, நெல்லையில் இன்று தொடங்கப்பட்டது. இந்த புதிய கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவானது, நெல்லையில் சங்கர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பாலாஜி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் எல் பாலாஜி, “நம் சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரரான தோனி கிராமத்தில் இருந்து தான் வந்துள்ளார். இப்போது மிக சிறந்த விளையாட்டு வீரராக இருக்கிறார். கடந்த காலங்களில் மும்பை, பெங்களூர், சென்னை ஆகிய பெருநகரங்களில் இருந்துதான் அதிக கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளார்கள். ஆனால் இன்று கிராமத்தில் இருந்தும் கிரிக்கெட் விளையாட வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான வசதியும் வாய்ப்பும் தற்போது பிரகாசமாக இருக்கிறது.

நான் எப்போதும் அப்துல் கலாமை நினைக்கக் கூடியவன். அவர் கனவு காணுங்கள் என சொன்னது கண்டிப்பாக நிறைவேறும். அதன்படி மாணவர்கள் கனவு காண வேண்டும். கண்டிப்பாக அது நடக்கும்.

கிராம பகுதிகளில் கிரிக்கெட் போட்டி மிக நன்றாக வளர்ந்து உள்ளது. கிராமப் பகுதி மாணவர்கள் கிரிக்கெட் போட்டியில் ஆர்வமாக இருந்தால், அவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளும் மேற்கொள்ளப்படும். கிரிக்கெட்டில் விளையாடுவது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. இன்றைய பொழுதில் கிரிக்கெட் துறை நன்றாக வளர்ந்து உள்ளது. கிரிக்கெட்டை நன்றாக விளையாடினால் உங்களது வாழ்க்கையை நீங்கள் நன்றாக அமைத்துக்கொள்ள முடியும்.

தற்போது இந்திய டீம் நன்றாக உள்ளது. இருந்தாலும் ஆல் ரவுண்டர்ஸ் தேவையாக உள்ளனர். கிரிக்கெட்டில் திறமை இருந்தால் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். யார் வேண்டுமானாலும் வளரலாம். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு அணிகளுக்கும், இந்தியாவுக்கும் விளையாட வர வேண்டும்.

நம் தமிழகத்தின் கிரிக்கெட் விளையாட்டு வீரர் நடராஜ், கடந்து வந்த பாதையை பாருங்கள். அதுவே அவருக்கு வெற்றி தான். விளையாட்டில் சில காயங்கள் ஏற்படும், ஆனால் சில தடுப்புகள் இருக்கும். அதை எல்லாம் தாண்டி வர வேண்டும், அதை நடராஜன் கண்டிப்பாக செய்து மீண்டும் வருவார். நீங்கள் நிறைய நாட்கள் விளையாடினால் உங்களது திறமையும் அப்படி மேம்பட்டு வெளிப்படும்.

உலக கோப்பையை வெற்றிபெறுவது என்பது, எளிது கிடையாது. இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று தான் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் விளையாடுவார்கள். விளையாட்டு வீரர்கள் ஒரு நேரத்தில் மேலேயும் மற்றொரு நேரத்தில் கீழேவும் தான் இருப்பார்கள். தற்போது இந்தியாவில் வீரர்கள் தேர்வு என்பது சரியாகத்தான் நடத்தப்படுகிறது. இந்தியா ஆஸ்திரேலியா போட்டிகள் இங்கு நடைபெறும் போது நல்ல விளையாட்டாக இருக்கும் என நம்புகிறேன். கிரிக்கெட் வடிவங்களில், எனக்கு பிடிச்சது டெஸ்ட் கிரிக்கெட் தான்” என பாலாஜி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com