தொடங்கிய வேகத்தில் சரிந்தது வங்கதேசம் - இந்தியாவுக்கு 223 ரன் இலக்கு
துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணிக்கு தொடக்க வீரர்கள் லிடன் தாஸ், ஹாசன் மிரஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே லிடன் இந்திய பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி பவுண்டரிகளாக விளாசினார். இதனால், ரன் ரேட் 6க்கு மேல் இருந்தது. 33 பந்துகளில் அரைசதம் விளாசினார் லிடன்.
ஒருபுறம் லிடன் அதிரடியாக விளையாட, மறுபுறம் மிரஸ் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரிடன் சிறப்பான ஆட்டத்தால் 18 ஓவர்களில் வங்கதேசம் அணி 100 ரன்களை எட்டியது. புவனேஸ்வர் குமார், பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா என அனைவரும் பந்துவீசி பார்த்துவிட்டார்கள். ஆனால், விக்கெட் விழவேயில்லை. வழக்கம் போல் பகுதி நேர பந்துவீச்சாளரான கேதர் ஜாதவ் அழைக்கப்பட்டார். உடனடி பலன் கிடைத்தது.
120 ரன்களுக்கு தான் முதல் விக்கெட் விழுந்தது. 32 ரன்களுக்கு மிரஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர் ஒற்றை இலக்க ரன்னில் வந்த உடன் நடையை கட்டினார்கள். இருப்பினும் தனி ஆளாக லிடன் தாஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். விக்கெட்கள் வரிசையாக வீழ்ந்ததால் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய அவர் பின்னர் நிதானமாக விளையாடினார். இருப்பினும் அவரும் 121 ரன்னில் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
வங்கதேசம் அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் 3, கேதர் ஜாதவ் 2 விக்கெட்களை சாய்த்தனர். பும்ரா, சாஹல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 3 ரன் அவுட் செய்யப்பட்டது. இதனையடுத்து 223 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.