சென்னை டெஸ்ட்: விக்கெட் இழப்பால் தடுமாறும் இந்தியா!
சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து நேற்று முன்தினம் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து. இதில் தொடக்க வீரர் டோம் சிப்லே 87 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கேப்டன் ஜோ ரூட் நேற்று இரட்டை சதமடித்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்பு ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களை விரைவாக சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்பு வந்த போப், ஜோஸ் பட்லர் ஆகியோர் முறையே 34, 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் டக் அவுட்டானார். இதனையடுத்து இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இன்று 600 ரன்கள் எடுத்து இங்கிலாந்து டிக்ளர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி விரைவாக எஞ்சிய விக்கெட்டுகளை இழந்து 578 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, ஷபாஸ் நதீம் தலா இரண்டு விக்கெடை எடுத்தனர். இதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 6 ரன்களில் அவுட்டானார். விரைவாக ரன்களை சேர்த்து வந்த சுப்மன் கில்லும் 29 ரன்களுக்கு அவுட்டானார். உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 20 ரன்களுடனும், கோலி 4 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.