சிறந்த வீரர்களை நீங்களே தேர்வு செய்யுங்கள்: பிரஸ் மீட்டில் கோலி கோபம்
சிறந்த 11 வீரர்களை நீங்களே தேர்வு செய்து சொல்லுங்கள், அவர்களை கொண்டு நாங்கள் விளையாடுகிறோம் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் கொந்தளித்தார்.
தென்னாப்ரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கோலி சற்று பொறுமையை இழந்தார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், பேட்ஸ்மேன்கள் சரிவர விளையாடவில்லை என்று கூறினார். அணி தோல்வி அடையும்போது தனிப்பட்ட சாதனைகள் முக்கியமல்ல என்று விராட் கோலி தெரிவித்தார்.
இந்திய அணியில் செய்த மாற்றங்கள் பலன் அளிக்கவில்லை என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது,
சிறந்த 11 வீரர்களை நீங்களே தேர்வு செய்து சொல்லுங்கள் அவர்களை கொண்டு நாங்கள் விளையாடுகிறோம் என்றார். சற்று உணர்ச்சிவசப்பட்ட கோலி நான் இங்கு பதில் அளிக்க வந்துள்ளேன், உங்களுடன் சண்டையிட அல்ல என்று கூறினார். எங்கு விளையாடினாலும் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறோம் என்றார்.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. பந்துவீச்சாளார்கள் தங்களின் பணியை சிறப்பாக செய்துவரும் வேளையில் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். இந்த தொடரில் இதுவரை இந்தியா தரப்பில் ஒரு சதமும், ஒரு அரைசதம் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. கோலி, பாண்ட்யா தவிர யாரும் 50 ரன்களை கடக்கவில்லை. எப்பொழுதும் ஆக்ரோஷமான அணுகுமுறை கையாளும் கோலி இரண்டாவது போட்டியில் இந்த முறை விக்கெட்டுகளை வீழ்த்த திட்டமிடாமல் ரன்களை கட்டுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். புதிய பந்தை தேர்வு செய்வதிலும் அவரிடம் தயக்கம் இருந்தது. தென்னாப்பிரிக்கா அளவுக்கு ஆக்ரோஷமாக இந்திய வீரர்கள் பந்துவீசவில்லை என்றாலும் அவர்களது பந்துவீச்சு திருப்திகரமாக இருந்தது. கடந்தாண்டு கோலி தலைமையில் வீறுநடை போட்ட இந்திய அணி தற்போது தொடக்கத்திலே தடுமாறி வருகிறது.