இன்று 2 வது டி20: சேஹல், குல்தீப் மேஜிக் தொடருமா?
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது. இந்தூரில் நடக்கும் இந்தப் போட்டியில் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்தூரில், பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இன்றைய போட்டியில் சுழல் பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்தும் என்று தெரிகிறது. இதனால் சேஹல், குல்தீப் இந்தப் போட்டியில் சாதிக்க வாய்ப்பிருக்கிறது.
கட்டாகில் நடந்த போட்டியில் கே.எல். ராகுல், தோனி, மனிஷ் பாண்டே அதிரடியாக விளையாடினார்கள். இதிலும் அவர்கள் அதிரடியாக விளையாட வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் சின்ன மைதானம் என்பதால் இங்கு சிக்சர், பவுண்டரிகளுக்கு பஞ்சமிருக்காது.
திசரா பெரேரா தலைமையிலான இலங்கை அணி, சீனியர் விரர்களான தாரங்கா, மேத்யூஸைதான் அதிகம் நம்பி இருக்கிறது. ஆனால் அவர்களும் சொதப்பி வருகின்றனர். இன்றைய போட்டியில் அவர்கள் ஆக்ரோஷம் காட்டுவார்கள் என்று தெரிகிறது.
இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டி நடப்பது இதுதான் முதல் முறை. செப்டம்பரில் இங்கு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 294 ரன்கள் இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக ‘சேசிங்’ செய்தது.
போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

