ஆசிய கோப்பை ஹாக்கி| சீனாவை 7-0 என வீழ்த்தியது இந்தியா.. இறுதிப்போட்டிக்கு தகுதி!
ஆசியக்கோப்பை ஹாப்பி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி
சீனாவை 7-0 என வீழ்த்தி இந்தியா ஹாக்கி அணி அபாரம்
ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்கொரியாவை எதிர்கொள்கிறது இந்தியா
12-வது ஆசியக்கோப்பை ஹாக்கி தொடர் பீஹார் மாநிலம் ராஜ்கிர் நகரில் உள்ள பீஹார் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிடி ஹாக்கி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது.
கடந்த ஆகஸ்டு 29-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் போட்டியில் இந்தியா, மலேசியா, சீனா, தென் கொரியா, ஜப்பான், கஜகஸ்தான், வங்கதேசம் மற்றும் சீன தைபே முதலிய 8 அணிகள் பங்குபெற்று விளையாடின.
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பரபரப்பாக நடந்துமுடிந்த லீக் சுற்றுப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, மலேசியா, சீனா, கொரியா முதலிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன.
இறுதிப்போட்டியில் இந்தியா..
இந்தியா மற்றும் தென்கொரியா அணிகள் மோதிய முதல் சூப்பர் 4 போட்டி 2-2 என சமனில் முடிந்தது. அதற்குபிறகு விளையாடிய மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் 4-1 என அதிரடி காட்டிய இந்தியா, சூப்பர் 4 சுற்றின் கடைசிப்போட்டியில் சீனாவை எதிர்த்து விளையாடியது.
சீனாவிற்கு எதிராக ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஹாக்கி வீரர்கள், தொடக்கமுதலே ஆதிக்கம் செலுத்தினர். ஒன்று, இரண்டு என முன்னேறிய இந்திய அணி மொத்தமாக 7 கோல்களை அடித்தது, பரிதாபமான சீனாவில் ஒரு கோலை கூட அடிக்க முடியவில்லை. இறுதியாக 7-0 என சீனாவை தோற்கடித்த இந்தியா ஹாக்கி அணி ஆசியக்கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான தென்கொரியாவை எதிர்த்து விளையாடவிருக்கிறது இந்தியா. கடைசியாக 2013 ஆசியக்கோப்பை இவ்விரு அணிகள் இறுதிப்போட்டியில் மோதிய நிலையில், தென்கொரியா அணி 4-3 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்து கோப்பை வென்றது.