'இந்தியா கோப்பையை வெல்ல வந்துள்ளது; ஆனா நாங்கள்' வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன்!

'இந்தியா கோப்பையை வெல்ல வந்துள்ளது; ஆனா நாங்கள்' வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன்!
'இந்தியா கோப்பையை வெல்ல வந்துள்ளது; ஆனா நாங்கள்' வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன்!

இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் நாளை நடக்கவுள்ள வங்காளதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி அசத்திய இந்திய அணி, 3வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 'குரூப் 2' பிரிவில் தென்னாப்பிரிக்க அணி 5 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிட்டது. 4 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய அணி. 3வது இடத்தில் வங்காளதேச அணியும் 4 புள்ளிகளுடன் இருக்கிறது. ரன்ரேட் குறைவாக இருப்பதால் வங்காளதேச அணி இந்தியாவுக்கு கீழ் உள்ளது.

இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் அடுத்து உள்ள 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்தவகையில் அடுத்ததாக வங்காளதேசத்தை தான் எதிர்கொள்கிறது. இதில் 2வது இடம் யாருக்கு என முடிவு தெரிந்துவிடும். இப்போட்டி நாளை (நவ.2) அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வங்காளதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டி ஒன்றில் கூறுகையில், ''இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதே அணுகுமுறையுடன் நாங்கள் விளையாட விரும்புகிறோம். நாங்கள் எந்த ஒரு எதிர்ப்பிலும் கவனம் செலுத்த விரும்பவில்லை. நாங்கள் எங்கள் திட்டங்களில் கவனம் செலுத்த விரும்புகிறோம். எங்கள் வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்த உலகக் கோப்பையில் கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் ஒரு முழுமையான அணி செயல்திறனை வழங்குவதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

எங்கள் அணிக்கு எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாட விரும்புகிறோம். இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக எங்களால் வெற்றி பெற முடிந்தால் அது வருத்தமாக இருக்கும். ஏனெனில் இரு அணிகளும் எங்களை விட சிறந்தவை. அதற்காக எங்களால் வெற்றி பெற முடியாது என்று நான் சொல்லவில்லை. அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எங்களால் அதைச் செய்ய முடிந்தால், நான் மகிழ்ச்சியடைவேன்.

இந்தியா எங்கு விளையாடினாலும் அந்த அணிக்கு பெரிய ஆதரவு கிடைக்கிறது. அதனால் வங்காளதேசம் - இந்தியா அணிகளுக்கிடையேயான ஆட்டமாக விறுவிறுப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணியினர் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கு வந்துள்ளனர். நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. நாளைய போட்டியில் இந்தியாவை வீழ்த்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: நியூசிலாந்து, வங்கதேச தொடர்: 4 வகையான இந்திய அணி அறிவிப்பு - யார் உள்ளே, யார் வெளியே?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com