இந்தியா அபார வெற்றி: சொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி
கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்தது.
கேப்டன் விராட் கோலி(131), ரோகித் சர்மா(104) அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர். மணிஷ் பாண்டே(50), தோனி(49) சிறப்பாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதனையடுத்து, 376 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக டிக்வெல்லா, முனவிரா களம் இறங்கினர். கடினமான இலக்கு என்பதால் அடித்து விளையாட முற்பட்ட டிக்வில்லா 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மெண்டீஸ் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் நடையை கட்டினார். முனவீரா(11), திரிமன்னே(18) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர், மேத்யூஸ் மற்றும் சிரிவர்தனா இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேத்யூஸ் அவ்வவ்போது பவுண்டரிகளை அடித்தார். இருவரும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது. சிரிவர்தனா 39(43) ரன்கள் எடுத்திருந்த போது பாண்டியா பந்தில் கேட்சானார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மேத்யூஸ் 70 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை அணி 42.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் பும்ரா, பாண்டியா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அறிமுக வீரரான தாக்கூர் 7 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.