நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இந்தியா - ஆஸ்திரேலியா 2ஆவது போட்டி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெறும் 2-வது ஒரு நாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் களம் இறங்குவார் எனத் தெரிகிறது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் சிட்னி நகரில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள், இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
குறிப்பாக சஹால் 89 ரன்களையும், நவ்தீப் சைனி 83 ரன்களையும் வாரி வழங்கினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 374 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று அதே சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சைனிக்குப் பதில், தமிழகத்தின் யார்க்கர் மன்னன் நடராஜன் களம் இறங்குவார் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே முதலாவது போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணி வீரர்களுக்கு, அவர்களது ஊதியத்தில் 20 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.