இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து பாலோ ஆன் பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அறிமுக வீர்ராக களமிறங்கிய பிருத்வி ஷா 134 ரன்கள் எடுத்தார். புஜாரா 86 ரன்களும் கேப்டன் விராத் கோலி 139 ரன்களும் ரிஷாப் பன் ட் 92 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 100 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிஷூ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தது.
தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் (2 ரன்), பாவெல் (1 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காலி செய்தார். இதன் பின்னர் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிரண்டனர். 2-வது நாள் முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் 29 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 94 ரன்களுடன் தவித்துக் கொண்டிருந்தது.
ஆல்-ரவுண்டர் சேஸ் 27 ரன்னுடனும், பால் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3 வது நாள் ஆட்டம் தொடங் கியது. சேஸ் 53 ரன்கள் எடுத்து அஸ்வின் சுழலில் போல்டானார். பால் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த லெவிஸ், கேப்ரியல் ஆகியோரையும் அஸ்வின் சாய்க்க, அந்த அணி 48 ஓவர்களில் 181 ரன்னுக் கு அனைத்து விக்கெட்டையும் இழந்து பாலோ ஆன் பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டையும் ஷமி 2 விக்கெட் டையும் உமேஷ் யாதவ், குல்தீப், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆட்டத்தை தொடர்ந்தது பிராத்வொயிட் 10 ரன்களில் அஸ்வின் சுழலில் பிருத்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாவெலும் (21 ரன்) ஷான் ஹோப்பும் ஆடிவருகின்றனர். 11.30 மணி நிலவரப்படி அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.