முதல் அரை சதத்தைப் பதிவு செய்த தோனி: இந்திய அணி 202 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரெய்னா, தோனி ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் இந்திய அணி 202 ரன்கள் குவித்தது.
பெங்களூருவில் நடந்துவரும் இந்தபோட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராத் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். விராத் கோலி 4 ரன்களிலும், ராகுல் 22 ரன்களிலும் வெளியேறினர். இதையடுத்து கைகோர்த்த அனுபவ வீரர்களான ரெய்னாவும், தோனியும் சீரான ரன்குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா 63 ரன்கள் குவித்து வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய தோனி, சர்வதேச டி20 போட்டிகளில் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். ரெய்னாவைத் தொடர்ந்து களமிறங்கிய யுவராஜ், தனக்கே உரிய பாணியில் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தார். அவர் 10 பந்துகளில் 27 ரன்கள் குவித்து இந்திய அணியின் 200 ரன்கள் கனவை நனவாக்க உதவினார். தோனியின் தனது பங்குக்கு 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணிக்கு 203 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.