ராஞ்சி டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 129 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ராஞ்சியில் நடந்துவரும் இந்த போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் நான்காவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, சீரான வேகத்தில் ரன்குவிப்பில் ஈடுபட்டது. புஜாரா மற்றும் சாஹா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 3ஆவது இரட்டை சதத்தினைப் பதிவு செய்தார். ஆஸ்திரேலிய அணிக்கெதிராக அவர் அடிக்கும் 2ஆவது இரட்டை சதம் இதுவாகும். 525 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 202 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய விருத்திமான் சாஹா சதமடித்து அசத்தினார். அவர் 117 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் ஜடேஜா அதிரடி காட்ட இந்திய அணி முன்னிலை அதிகரித்தது. 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியை விட 152 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றது. ரவீந்திர ஜடேஜா 55 ரன்களுடனும், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஓ கஃபே 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 4ம் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 14 ரன்களுடனும், லியோன் 2 ரன்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். நாளை ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் மீதமுள்ள 8 விக்கெட்டுகளை 129 ரன்களுக்குள் வீழ்த்தினால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறலாம்.