ஆஸி.க்கு 'ஸ்வீப் ஷாட்' ; இந்தியாவுக்கு கே.எல்.ராகுல்! இன்றே முடிவை நோக்கும் டெல்லி டெஸ்ட்

ஆஸி.க்கு 'ஸ்வீப் ஷாட்' ; இந்தியாவுக்கு கே.எல்.ராகுல்! இன்றே முடிவை நோக்கும் டெல்லி டெஸ்ட்
ஆஸி.க்கு 'ஸ்வீப் ஷாட்' ; இந்தியாவுக்கு கே.எல்.ராகுல்! இன்றே முடிவை நோக்கும் டெல்லி டெஸ்ட்

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று தொடங்கிய 3 ஆம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு முன்பே ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிIங்ஸில் மளமள தனது விக்கெட்டுகளை இழந்ததால், இந்தியா வெற்றிப்பெற 115 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிப்பெற்றது. இதனையடுத்து தலைநகரில் டெல்லியில் 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களை சேர்த்தது.

இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் கோலி, அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் போன்றோறின் ஆட்டத்தால் இந்தியா கஷ்டப்பட்டு 262 ரன்களை சேர்த்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 1 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய தனது 2 ஆவது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. இதில் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 62 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இதனையடுத்து இன்று 3 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார் அஷ்வின். இதனையடுத்து வந்த ஸ்மித், ரென்ஷா, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், பாட் கம்மின்ஸ் ஆகியோர் அஷ்வின் மற்றும் ஜடேஜா சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் அவுட்டானார்கள். கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய மார்னஸ் லபுஷானே 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் கேரவும் 7 ரன்களில் நடையைகட்டினார்.

அதற்கடுத்து வந்த நாதன் லயனும், மாத்யூவும் அவுட்டாகி ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் ஜடேஜா 7 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினர். இதனையடுத்து இந்தியா இந்தப் போட்டியில் வெற்றிப்பெற 115 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து களத்துக்கு வந்த இந்திய ஓப்பனர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் வழக்கம்போல இந்த இன்னிங்ஸில் தனது 'அதிகபட்ச' ஸ்கோரான 1 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து இந்திய அணி உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்புக்கு 14 ரன்களை சேர்த்துள்ளது.

கேப்டன் ரோகித் சர்மா சர்மா 12 ரன்களுடனும், புஜாரா 1 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டை போல இந்த டெஸ்ட் போட்டியும் 3 ஆம் நாளிலேயே முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com