தோல்விக்கு காரணம் என்ன ? - மனம் திறந்த விராட்
இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ரன்களும், இந்திய அணி 272 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 423 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இதனையடுத்து 464 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்தது.
இந்திய அணியில் கே.எல்.ராகுல் 149 ரன்கள் மற்றும் ரிஷப் பந்த் 114 ரன்கள் எடுத்தும் அவுட் ஆகினர். வெற்றிக்காக நடத்திய அவர்களின் பேட்டிங் போராட்டம் இந்திய ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது. இருப்பினும் இந்தியா தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் தோல்வியடைந்து இந்தியா தொடரை இழக்கும் நிகழ்வு 6 வருடங்களுக்குப் பிறகு அரங்கேறியுள்ளது. இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் 4-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, “எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதை நாங்கள் தவறவிட்டோம். ஏற்கனவே கோப்பை உறுதி என்பதால் இங்கிலாந்து அணி எவ்வித அச்சமும் இன்றி விளையாடிது. அதுவே அவர்கள் எங்களை வெற்றி பெறுவதற்கு சாதகமாக அமைந்தது. இந்தத் தொடரில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளோம். வெற்றிக்காக போராடிய இளம் வீரர்களான பந்த் மற்றும் ராகுல் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்தப் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் குக் விடைபெற்றுள்ளார். அவரை பற்றி நான் ஒரே வரியில் கூறுகிறேன் ‘அவர் சிறப்பான கிரிக்கெட் வீரரான திகழ்ந்துள்ளார்’. அவரது எதிர்காலம் பிரகாசிக்க எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.