தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி சாதிக்கும்: ஜோதிடர் கணிப்பு
தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சாதிக்கும் என்று மும்பையை சேர்ந்த பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் உத்வேகத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சாதிக்கும் என்று மும்பையை சேர்ந்த பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய கேப்டன்கள் மற்றும் தென்னாப்பிரிக்க கேப்டன்களின் ஜாதகப்படி அது சரியாக அமைந்திருக்கவில்லை என்றும் இப்போது கேப்டன் விராத் கோலி உள்ளிட்ட வீரர்களின் ஜாதகங்களின் அடிப்படையில் சாதிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அசாரூதின் -கெப்ளர் வெசல்ஸ், சச்சின் -குரோஞ்ச், சவுரவ் கங்குலி- ஷான் பொல்லாக், ராகுல் டிராவிட் - ஸ்மித் போன்ற கேப்டன்களின் ஜாதகப்படி இந்திய அணிக்கு வாய்ப்பில்லை என்றும் இப்போது விராத் கோலி- டுபிளிசிஸ் ஜாதகப்படி, இந்திய அணிக்கு சாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்படியே சாதிக்க முடியவில்லை என்றாலும் தோற்க வாய்ப்பில்லை, டிரா ஆக வாய்ப்பிருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.