வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடரின் 34வது லீக் போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி(72), தோனி(56), கே.எல்.ராகுல்(48), ஹர்திக் பாண்ட்யா(46) ரன்கள் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய கேமர் ரோச் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனைத் தொடர்ந்து 269 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க முதலே தடுமாறி வந்தது. தொடக்க ஆட்டக்காரர் கெயில் 6 ரன்களுடன் ஷமி பந்துவீச்சில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹோப்பும் 5 ரன்களில் அவுட் ஆனார். இதன்பிறகு களமிறங்கிய நிகோலஸ் புரன், சுனில் அம்பரீஸ் உடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 55 ரன்கள் சேர்த்தனர். சுனில் அம்பரீஸ் 31 ரன்களுடன் பாண்ட்யா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவேலையில் விக்கெட் இழந்தது. ஹெர்ட்மெயர் (18), ஹோல்டர் (6), பிராத்வேட்(1),ஆலேன்(0) என அடுத்தடுத்து அவுட்டாகினர்.
இறுதியில் கேமர் ரோச் மற்றும் சற்று அதிரடியாக 3 பவுண்டரிகள் விலாசினார். எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து படுத்தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட், பும்ரா மற்றும் சாஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

