என்னா டென்ஷன்... கடைசி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றி!

என்னா டென்ஷன்... கடைசி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றி!
என்னா டென்ஷன்... கடைசி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 7 வது முறையாக கோப்பையை வென்றது.

14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில், 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றதால் இலங் கை மற்றும் ஹாங்காங் அணிகள் வெளியேறின. தொடர்ந்து நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணி கள் வெளியேறின. இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் நேற்று மோதின. 

 துபாயில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிக்கு தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ், மெஹடி ஹாசன் களமிறங்கினர். மெஹடி அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர். ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவர் தொடக்க வீரராக அனுப்பப்பட்டார். அதை அவரும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். தொடக்கம் முதலே லிட்டன் இந்திய பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி பவுண்டரிகளாக விளாசினார். இதனால், ரன் ரேட் 6-க்கு மேல் இருந்தது. 33 பந்துகளில் அரைசதம் விளாசினார் லிட்டன். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் 18 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை எட்டியது. புவனேஸ்வர் குமார், பும்ரா, குல்தீப் யாதவ், சேஹல், ஜடேஜா என அனைவரும் பந்துவீசி பார்த்துவிட்டார்கள். ஆனால், விக்கெட் விழவேயில்லை. இதையடுத்து பகுதி நேர பந்துவீச்சாளரான கேதர் ஜாதவ் அழைக்கப்பட்டார். உடனடி பலன் கிடைத்தது.

120 ரன்களுக்கு தான் முதல் விக்கெட் விழுந்தது. 32 ரன்களுக்கு மெஹடி ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இருப்பினும் தனி நபராக லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடி, அபார சதம் அடித்தார். இது அவருக்கு முதல் சதம். அவர் அடித்த விதத்தைப் பார்த்தால் பங்களாதேஷ் அணி 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், அடுத்து விக்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்தன. இதனால் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய லிட்டன் தாஸ் பின்னர் நிதானமாக விளையாடினார். இருப்பினும் அவரும் 121 ரன்னில் தோனி யால் ஸ்டம்பிங் செய்யப் பட்டார்.

பங்களாதேஷ் அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் 3, கேதர் ஜாதவ் 2 விக்கெட்களை சாய்த்தனர். பும்ரா, சேஹல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 3 ரன் அவுட் செய்யப்பட்டது. 

இதனையடுத்து 223 என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் களமிறங்கியது. கடந்த போட்டிகளில் கலக்கிய தவான் 15(14) ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடுவும் 2 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த 
தினேஷ் கார்த்திக்கும், ரோகித் சர்மாவும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 48) ரன்களில் ரூபெல் ஹூசைனின் ஷாட் பிட்ச் பந்தை தூக்கியடிக்க கேட்ச் ஆகி  வெளியேறினார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக்குடன், தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் மெதுவாக உயர்ந்தது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இவர்கள் இருவரும் திணறினர். தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து தோனியும் 36 ரன்களில் வெளியேற பரபரப்புத் தொற்றிக்கொண்டது.

அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ் தசைப்பிடிப்புக் காரணமாக 19 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜடேஜாவும், புவனேஷ்வர் குமாரும் அணியை வெற்றிபெற வைக்க போராடினர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. திடீரென்று ஜடேஜா 23 ரன்களில் கேட்ச் ஆக, அவரைத்தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் 21(31) ரன்களில் வெளியேற பரபரப்பு மேலும் கூடியது. இதையடுத்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டு திரும்பிய கேதர் ஜாதவும் குல்தீப் யாதவும் களத்தில் இருந்தனர். அந்த ஓவரை மஹமத்துல்லா வீசினார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப் பட்டது. இதனால் படபடப்பும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது. இந்நிலையில் கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து படப்படப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கேதர் ஜாதவ்.

இதையடுத்து இந்திய அணி 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. பங்களாதேஷ் சார்பில் அதிகபட்சமாக, ரூபெல் ஹூசைன், மிஷிபூர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளும், நம்சுல் இஸ்லாம், மோர்டாசா, மஹமத்துல்லா  தலா 1 விக்கெட் டும் வீழ்த்தினர். 

இதன்மூலம் இந்திய அணி 7 முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது முதல் சதம் கண்ட பங்களாதேஷ் வீரர் லிட்டன் தாஸூக்கும் தொடர் நாயகன் விருது தவானுக்கும் வழங்கப்பட்டது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com