INDvsAUS: 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

INDvsAUS: 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!
INDvsAUS: 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையே பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் டிராபி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்கிய முதல் டெஸ்ட்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டெல்லியில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கியது.

இதில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் அந்த அணி, 10 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹவாஜா 81 ரன்களும், பீட்டர் 72 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், ஷமி 4 விக்கெட்களையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பின்னர், முதல் இன்னிங்ஸை விளையாடி இந்திய அணி, 10 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியைவிட 1 ரன் பின்தங்கி இருந்தது. இந்திய அதிகபட்சமாக அக்‌ஷர் படேல் 74 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் சுழல் தாக்குதலில் நிலைகுலைந்ததுடன் 113 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டிராவிஸ் ஹெட் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ஜடேஜா 7 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 115 ரன்கள் எடுத்தால் (முதல் இன்னிங்ஸில் 1 ரன் + 113 =114) வெற்றிபெறலாம் என்ற இலகுவான நோக்குடன் களமிறங்கிய இந்திய அணி, இன்று அதை விரைவாக எட்டி வெற்றிபெற்றது. 26.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

புஜாரா 31 ரன்களுடனும், பரத் 23 ரன்களும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிப் பாதைக்குச் சென்றனர். இந்த இன்னிங்ஸிலும் நாதன் லயன் 2 விக்கெட்களைச் சாய்த்தார். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 2-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலிலும் இந்திய அணி, 2வது இடத்திலேயே நீடித்தாலும், சற்று பாயிண்ட் கணக்கில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றுவிட்டால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com