இந்தியா-ஆஸ்தி., கிரிக்கெட் போட்டி: ரசிகர்களுக்கு கூடுதல் ரயில்கள்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நாளை சென்னையில் நடைபெறுவதால் ரசிகர்களுக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து 4 ஒரு நாள் போட்டிகளும், 3 டி20 போட்டிகளிலும் நடைபெறவுள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக கூடுதல் பறக்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், நாளை பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து திருமயிலைக்கும், மறுமார்க்கத்தில் திருமயிலையில் இருந்து சென்னை கடற்கரைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போட்டி முடிந்து ரசிகர்கள் வீடு திரும்பும்போதும் வேளச்சேரி மற்றும் சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.