துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி : பதக்க பட்டியலில் இந்தியா முன்னேற்றம்
காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த புதன்கிழமை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கென்யா, மலேசியா உள்ளிட்ட 71 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்று சாதனை படைத்தார். மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்றார். இதேபோட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை ஹீனா சித்து வெள்ளி வென்றார். இதுவரை இந்தியா 9 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதில் 6 தங்கப் பதக்கமும், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கம் அடங்கும்.