மீண்டும் கேப்டனாகக் களமிறங்கி ருத்ரதாண்டவமாடிய தோனி
இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தோனி தலைமையிலான இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய பின்னர் அவர் தலைமையில் இந்திய ஏ அணி இன்று களம் கண்டது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியா ஏ அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து இந்தியா ஏ அணியின் இன்னிங்ஸை ஷிகர் தவான் மற்றும் மன்தீப்சிங் ஆகியோர் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்த்த நிலையில் மன்தீப் 8 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த அம்பாதி ராயுடு சீரான ரன்குவித்தார். தவான் 63 ரன்களில் ஆட்டமிழக்க, சதமடித்த ராயுடு ரிட்டையர்டு ஹர்ட்டாக வெளியேறினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்த யுவராஜ் சிங், 56 ரன்கள் குவித்து தனது தேர்வை நியாபப்படுத்தினார். இதையடுத்து ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் களமிறங்கிய தோனி, தனது ஆரம்பகால பேட்டிங்கை நினைவுபடுத்தும் வகையில் விளையாடினார். போட்டியின் 42ஆவது ஓவரில் களமிறங்கிய தோனி 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா ஏ அணி 5 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி மற்றும் ஜேக் பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.