இன்று கடைசி ஒரு நாள் போட்டி: ஆஸி. சாதனையை நிகழ்த்துமா இந்தியா?
இந்தியா - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. பின்னர், 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களில் 4-ல் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 6-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித், கோலி ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக செயல்பட்டு வரும் நிலையில் மிடில் ஆர்டரில் யாரும் நிலைத்து நிற்பதில்லை. இதனால் கடைசிகட்டத்தில் இந்திய அணி, அதிக ரன்கள் குவிக்க திணறிவருகிறது. அதே போல சேஹல், குல்தீப் சூழல் இந்திய அணிக்கு பலமாக இருந்து வருகிறது.
தொடரைக் கைப்பற்றி விட்டதால், ஆடும் லெவனில் இடம் பிடிக்காமல் இருக்கும் தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, அக்ஷர் படேல், ஷமி ஆகியோரில் சிலருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.
தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் ஒரு தொடரில் 5 ஆட்டங்களில் இதற்கு முன்பு ஆஸ்திரேலியா மட்டுமே வென்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து அந்த சாதனையை இந்திய அணி நிகழ்த்த வாய்ப்பிருக்கிறது.
தொடரை இழந்துவிட்டதால் தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்குகிறது. இதில் வென்றால் டி20 போட்டித் தொடரில் உத்வேகத்துடன் விளையாடலாம் என தென்னாப்பிரிக்கா நினைக்கிறது. இதனால், இன்றைய போட்டி பரபரப்புடன் இருக்கும்.