இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போர் போன்றதுதான்: ஷேவாக்
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுவது போர் போன்றது தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் தெரிவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது. புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் கிடம், இதுபற்றி கேட்டபோது, ‘ இரண்டு விஷயங்கள் பற்றி அதிக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானுடன் நாம் போர் (விளையாட்டு மூலம்) புரிய வேண்டுமா, வேண்டாமா?. மற்றொன்று, நாட்டு நலனுக்கு எது முக்கியமோ, அதை செய்ய வேண்டும் என்பது. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுவது என்பது கிட்டத்தட்ட ஒரு போர் போன்றதுதான். அதில் நாம் வெற்றி பெற வேண்டும். தோற்கக்கூடாது’ என்று கூறினார்.