என்னது குளிக்க கட்டுப்பாடா? ஜிம்பாப்வேயில் ஷாக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

என்னது குளிக்க கட்டுப்பாடா? ஜிம்பாப்வேயில் ஷாக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
என்னது குளிக்க கட்டுப்பாடா? ஜிம்பாப்வேயில் ஷாக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஒருநாள் போட்டி அந்நாட்டின் தலைநகர் ஹராரேவில் நாளை (ஆகஸ்ட் 18) தொடங்குகிறது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

ஜிம்பாப்வேயில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் நாட்டு மக்கள் அடிப்படை தேவைக்குக்கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அந்நாட்டின் தலைநகர் ஹராரேவில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் பஞ்சம் நீடிக்கிறது. குடிநீருக்காக கூட மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் விரைந்து குளித்துவிட்டு வர வேண்டும் என்றும், வழக்கமாக நடத்தப்படும் நீச்சல் குளம் செஷன்கள் இம்முறை கிடையாது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. முடிந்தவரை தண்ணீரைச் சேமிக்கவும், குளிப்பதற்கு குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தவும் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பல மணி நேரம் மைதானத்தில் பயிற்சி செய்துவிட்டு அறைக்கு திரும்பும் வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் அவர்களுக்கு தலைவலியாக மாறி வருவதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு குளிக்க கடும் கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதிப்பது இது முதல்முறையல்ல! 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்நாட்டின் தலைநகர் கேப்டவுனின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதை அடுத்து இந்திய அணி வீரர்கள் தண்ணீரை முடிந்தவரை குறைவாக பயன்படுத்துமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜிம்பாப்வே நாட்டுக்கும் தண்ணீர் பஞ்சம் புதிதல்ல! ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன், மக்கள் கழிவுநீரையே மீண்டும் பயன்படுத்த வேண்டிய நிலை மிகவும் மோசமாக சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com