இன்று, முதல் ஒருநாள் போட்டி: வரலாற்றை மாற்றுமா இந்திய அணி?
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பன் நகரில் இன்று நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 6 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி, டர்பனில் உள்ள கிங்க்ஸ்மேட் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது.
டெஸ்ட் போட்டியில் இந்தியா தொடரை இழந்த போதிலும், ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கும்.
இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றது இல்லை. தற்போதைய நிலையில் கேப்டன் விராத் கோலி, எம்.எஸ் தோனி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் மற்றும் பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்படுவதால் இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.
தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரையில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் காயம் காரணமாக முதல் மூன்று ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளது பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இன்றைய போட்டி நடைபெறும் டர்பன் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் இன்று ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.