இறுதிவரை பதறவைத்த வங்கதேசம்.. கடைசி பந்துவரை சீட் நுனியில் ரசிகர்கள்-இந்தியா த்ரில் வெற்றி

இறுதிவரை பதறவைத்த வங்கதேசம்.. கடைசி பந்துவரை சீட் நுனியில் ரசிகர்கள்-இந்தியா த்ரில் வெற்றி
இறுதிவரை பதறவைத்த வங்கதேசம்.. கடைசி பந்துவரை சீட் நுனியில் ரசிகர்கள்-இந்தியா த்ரில் வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் வங்கதேச அணி இறுதிவரை கடுமையாக போராடி தோல்வியை தழுவியது.

8-வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தகுதிச் சுற்று முடிவடைந்து, பரபரப்பாக நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நெதர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று 4 புள்ளிகளை பெற்றிருந்தது. ஆனால் அதன்பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதனால் அரையிறுதிக்கு தகுதிப்பெற வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியிலும், ஜிம்பாப்பே அணிக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று வங்கதேசத்திற்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றிபெறும் என்ற கணிப்புடன் களமிறங்கியது. ஆனால், அடிலெய்டில் மைதானத்தில் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து துவக்க ஆட்டக்காரர்களாக கே. எல். ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ஆனால், வங்கதேசம் முன்னரே கூறியிருந்தப் படி ஆரம்பம் முதலே டஃப் கொடுக்க ஆரம்பித்தனர். வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இந்திய அணி வீரர்கள் ரன் குவிப்பதில் தடுமாறினர். 7.4 ஓவர்களில்தான் இந்திய அணி 50 ரன்களை தொட்டது. எனினும் விராட் கோலி (64), கே.எல். ராகுல் (50), சூர்யகுமார் யாதவ் (30) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட சீனியர் வீரர்களான ரோகித் சர்மா (2), ஹர்திக் பாண்ட்யா (5), தினேஷ் கார்த்திக் (7) ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே இந்திய அணி ரசிகர்களை சோதித்தனர். வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்மத் 3 விக்கெட்டுகளும், ஷகீப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, கத்துக்குட்டி அணி என்பதை தாண்டி ஆரம்பத்திலேயே அதிரடியை வெளிப்படுத்தினர். துவக்க ஆட்டக்காரர்கள். நஜ்மல் ஹொசைன் ஷாண்டோ நிதானமாக விளையாட, மறுபுறம் லிட்டன் தாஸ் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை மரண காட்டு காட்டினார். புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய சீனியர் பவுலர்களின் பந்துவீச்சையும், இளம் வீரரான அர்ஷ்தீப் சிங்கின் பந்து வீச்சையும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் வெளுத்து தள்ளினார் லிட்டன் தாஸ். 21 பந்துகளில் அரைசதம் எடுத்து தோல்வி பயத்தை இந்திய அணிக்கு காண்பித்தார். இதனால் அந்த அணி வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 7 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்தது.

லிட்டன் தாஸ் 26 பந்துகளில் 59 ரன்களும், நஜ்மல் 16 பந்துகளில் 7 ரன்களும் எடுத்திருந்தார். அப்போது மழை குறுக்கிட்டு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதனால் டக்வோர்த் லூயிஸ் முறைப்படி ஓவர்கள் 16 ஆக குறைக்கப்பட்டு, இலக்கு 151 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 8-வது ஓவரை வீச களமிறங்கிய அஸ்வின் முதல் பந்திலேயே ரன்களை கட்டுப்படுத்தினார். லிட்டன் தாஸ் ஒரு ரன்னை எடுத்த நிலையில், 2-வது பந்தை அஸ்வின் நஜ்மலுக்கு வீசினார். அப்போது ரன் எடுக்க ஓடியபோது லிட்டன் தாஸ் 60 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டானார்.

இதன்பிறகு களமிறங்கிய வங்கதேச வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், கடைசிப்பந்து வரை இந்திய பவுலர்களுக்கு கடுமையான போட்டியை வங்கதேச வீரர்கள் அளித்தனர். அந்த அணி இறுதியாக 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 60 ரன்களும், நஜ்மல் 21 ரன்களும், நூரூல் ஹசன் 25 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளும், ஷமி ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார். 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி ஜிம்பாம்பே அணியுடன் மோதுகிறது.

இதனிடையே, வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துக்கள் இப்போது வைரல் ஆகி வருகிறது. அந்தப் பேட்டியில், ''இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதே அணுகுமுறையுடன் நாங்கள் விளையாட விரும்புகிறோம். நாங்கள் எந்த ஒரு எதிர்ப்பிலும் கவனம் செலுத்த விரும்பவில்லை. நாங்கள் எங்கள் திட்டங்களில் கவனம் செலுத்த விரும்புகிறோம். எங்கள் வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்த உலகக் கோப்பையில் கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் ஒரு முழுமையான அணி செயல்திறனை வழங்குவதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

எங்கள் அணிக்கு எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாட விரும்புகிறோம். இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக எங்களால் வெற்றி பெற முடிந்தால் அது வருத்தமாக இருக்கும். ஏனெனில் இரு அணிகளும் எங்களை விட சிறந்தவை. அதற்காக எங்களால் வெற்றி பெற முடியாது என்று நான் சொல்லவில்லை. அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எங்களால் அதைச் செய்ய முடிந்தால், நான் மகிழ்ச்சியடைவேன்.

இந்தியா எங்கு விளையாடினாலும் அந்த அணிக்கு பெரிய ஆதரவு கிடைக்கிறது. அதனால் வங்காளதேசம் - இந்தியா அணிகளுக்கிடையேயான ஆட்டமாக விறுவிறுப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணியினர் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கு வந்துள்ளனர். நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. நாளைய போட்டியில் இந்தியாவை வீழ்த்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்'' என்று கூறியிருந்தார்.

நேற்றைய பேட்டியில் அவர் சொன்னதை போல் சிறப்பான முறையில் வங்கதேச அணி விளையாடியது. இந்திய அணிக்கு இறுதிவரை தோல்வி பயத்தை காட்டியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com