இந்திய சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா... சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வின்!

இந்திய சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா... சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வின்!
இந்திய சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா... சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வின்!

நாக்பூரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி தொடக்க பேட்டர்களாக இறங்கிய டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஆகிய இருவரையும் சிராஜ் மற்றும் ஷமி இருவரும் முதல் 3 ஓவர்களிலேயே பெவிலியன் திரும்பவைத்தனர்.

என்றாலும் வேக தாக்குதலைத் தாக்குப்பிடித்து, லபுஸ்சேன் மற்றும் ஸ்டீவ் சுமித் களத்தில் நின்றனர். ஆனால் காயத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து அணிக்கு திரும்பிய ரவீந்திர ஜடேஜா, தன் சுழல் மாயஜாலத்தை நடத்தி அவர்களை வெளியேற்றினார். லபுஸ்சேன் 49 ரன்களிலும், சுமித் 37 ரன்களிலும் நடையை கட்டினர். பின்னர் வந்த ரென்ஜாவும் ஜடேஜா பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். அதற்குப் பிறகு பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் கைகோர்த்து அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் அவர்களையும் இந்திய பவுலர்கள் விட்டுவைக்கவில்லை. மீண்டும் ஜடேஜா பீட்டரை (31 ரன்கள்) வெளியேற்ற, தமிழக வீரரான அஸ்வின் தன் பங்குக்கு அலெக்ஸை (36 ரன்கள்) அனுப்பிவைத்தார்.

தொடர்ந்து கேப்டன் கம்மின்ஸையும் அஸ்வின் 6 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து ஜடேஜா, டாட் முர்பியை டக் அவுட்டாக்கினார். அவருக்குப் போட்டியாக அஸ்வின், ஸ்காட் போலந்தை 1 ரன்னில் வெளியேற்றினார். அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழல் தாக்குதலால் ஆஸ்திரேலிய அணி தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. இறுதியில் அந்த அணி 63.7 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் யாரும் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தினார். அவர், டெஸ்ட் போட்டிகளில் 11வது முறையாக 5 விக்கெட்களை எடுத்துள்ளார்.

அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். முன்னதாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 80 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில், அஸ்வின் 89 போட்டிகளில் இரண்டாவதாக 450 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார். இந்திய அளவில் முன்னாள் வீரர் அணில் கும்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

இருப்பினும் அவர் 93 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், அஸ்வின் இந்த சாதனையை 89 போட்டிகளிலேயே எடுத்து அசத்தியுள்ளார். தவிர, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதுவரை, அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 451 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த போட்டி தொடரை இந்திய அணி குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் வென்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com