“அந்தக் காலம் மலையேறிப்போச்சு” - ஆஸ்திரேலிய பயணம் குறித்து ரவி சாஸ்திரி பேட்டி
வெஸ்ட் இண்டீஸ் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் விளையாடவுள்ளது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் அதிரடி வெற்றியை பதிவு செய்தது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத காரணத்தால் இந்த தொடர் இந்தியாவிற்கு எளிதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் சொந்த மண் என்பதால் ஆஸ்திரேலிய வீரர்களின் பலம் சற்று அதிகமாகவே இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய பயணம் தொடர்பாக பேட்டியளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “ஒருகாலத்தில் இந்தியாவில் ஒன்று அல்லது இரண்டு பேர் தான் சிறப்பாக பந்துவீசுவார்கள். அந்தக் காலம் மலையேறிப்போச்சு. தற்போது இந்தியாவில் அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக 5 மணி நேரம் வரை சீரான பந்துவீச்சை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் பந்துவீச தொடங்கினால் எந்த பிட்ச் ஆக இருந்தாலும் அது ஒரு விஷயம் அல்ல. அவர்கள் அந்த தேர்வை பெற்றுவிட்டார்கள்.
அனேகமாக இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலிய பிட்ச்சில் பந்துவீசி ரசிப்பார்கள். அவர்கள் ஒரே சீராக ஒற்றுமையுடன் பந்துவீசியதை நம்மால் காண முடிந்தது. ஸ்மித் மற்றும் வார்னர் அணியில் இல்லாதது தொடர்பாக நான் எதுவும் நினைக்கவில்லை. ஆனால் எந்த அணியும் தங்கள் சொந்த மண்ணில் வலுவாக இருப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு” எனக் கூறினார்.