முதல் டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்!

முதல் டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்!
முதல் டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது போட்டி அடிலெய்டில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்குத் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் களமிறங்கினர். ராகுல் வெறும் 2 பந்துகளில் ஹசல்வுட் பந்துவீச்சில் பின்ஞ்சிடம் கேட்க் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து முரளி விஜய்யுடன் புஜாரா இணைந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் தடுமாறினர். 11 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய், ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் விராத் கோலி வந்தார். சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றினார் . அவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

பின்னர் வந்த துணை கேப்டன் ரஹானேவும் ஹசல்வுட் பந்துவீச்சில் 13 ரன்களில் வெளியேற, இந்திய அணி தடுமாறி வருகிறது. புஜாரா 11 ரன்களுடனும் ரோகித் சர்மா 1 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.

காலை 7.15 மணி நிலவரப்படி இந்திய அணி 22.3 ஓவர்களில் 42 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து ஆடிவருகிறது. முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துவிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com