INDvsAUS: 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முன்னிலை... கேப்டனாக ரோகித் சர்மா செய்த சாதனை!

INDvsAUS: 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முன்னிலை... கேப்டனாக ரோகித் சர்மா செய்த சாதனை!
INDvsAUS: 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முன்னிலை... கேப்டனாக ரோகித் சர்மா செய்த சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவைவிட 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நாக்பூர் முதல் டெஸ்ட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (பிப்ரவரி 9) நாக்பூரில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது.

அவ்வணியில் அதிகபட்சமாக லபுஸ்சேன் 49 ரன்களும், ஸ்டீவ் சுமித் 37 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களையும், தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2வது நாள் ஆட்டம்

முற்றிலும் இந்த மைதானம் சுழல் பந்துவீச்சுக்குச் சாதகமாக அமைந்திருந்தது. அது, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங்கின்போதும் எதிரொலித்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 24 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 69 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

பின்னர் இன்று காலை தொடங்கிய ஆட்டத்தில் அஸ்வின் 23 ரன்கள் எடுத்த நிலையில், அறிமுக பந்துவீச்சாளரான டாட் மர்பி பந்தில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பின் களமிறங்கிய புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பரத் ஆகியோர் பொறுப்பின்றி ஆடியதால், சொற்ப ரன்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

டாட் மர்பி 5 விக்கெட்கள்

ஆஸ்திரேலிய அணியின் 5 முக்கிய விக்கெட்களை ஜடேஜா வீழ்த்தியதுபோல, இந்திய அணியின் 5 முக்கிய விக்கெட்களை டாட் மர்பி வீழ்த்தி சாதனை படைத்தார். நேற்று அவருடைய பந்துவீச்சில் கே.எல்.ராகுல் மட்டும் வெளியேறிய நிலையில், இன்று அஸ்வின், புஜாரா, விராட் கோலி, பரத் ஆகிய 4 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணிக்காக ஆஃப் பிரேக் ஸ்பின்னர்களில் 5 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும், இந்தியாவுக்கு எதிராக அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் அவர் இடம்பிடித்தார்.

சதத்தில் சாதித்த ரோகித்

அதேநேரம் மறுபுறம் நிலைத்து நின்ற ரோகித் சர்மா, 9வது சதம் அடித்து அசத்தினார். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், டெஸ்ட் போட்டியில் கேப்டனாய்ப் பதவியேற்று முதல் சதம் அடித்துள்ளார் ரோகித். தவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டில் தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார் அவர். இந்த 9 சதங்களில் 8 சதங்கள் இந்தியாவில் நிகழ்த்தப்பட்டதாகும். ஒன்று மட்டும் வெளிநாட்டில் எடுத்துள்ளார். மேலும், இந்த சதத்தின் மூலம் 3 விதமான போட்டிகளிலும் (ஒருநாள், டி20, டெஸ்ட்) சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும், சர்வதேச அளவில் 4வது கேப்டனாகவும் உள்ளார். சர்வதேச பட்டியலில், இவருக்கு முன்பு இலங்கை வீரர் தில்ஷன், தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளெசிஸ், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஆகியோர் உள்ளனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, 212 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் அடித்து 120 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் பந்தில் வீழ்ந்தார். அவருக்குத் துணையாக நின்ற ரவீந்திர ஜடேஜாவும் அரைசதம் அடித்தார். அதுபோல், இறுதியில் இறங்கி நிலைத்து நின்ற அக்‌ஷர் படேலும் அரைசதம் அடித்தார். இதையடுத்து, இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்திய அணி 114 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 321 எடுத்திருந்தது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியைவிட 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரவீந்திர ஜடேஜா 66 ரன்களுடனும், அக்‌ஷர் படேல் 52 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நாளை காலை 3ஆம் நாள் ஆட்டம் தொடரும்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com