`இதனால்தான் அவர் 360° பேட்டர்!' - டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் செய்த அசாத்திய சாதனைகள்!

`இதனால்தான் அவர் 360° பேட்டர்!' - டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் செய்த அசாத்திய சாதனைகள்!
`இதனால்தான் அவர் 360° பேட்டர்!' - டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் செய்த அசாத்திய சாதனைகள்!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான டி20 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த வீரரும் நிகழ்த்தாத பல சாதனைகளை செய்து அசத்தியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்தே கிரவுண்டில் தான் நினைத்த எல்லா பக்கத்திற்கும் பந்தை அடிக்கும் தனித்திறமை உடையவர் சூர்யகுமார் யாதவ். தன்னுடைய அந்த தனித்திறமையால், `இந்தியாவின் 360டிகிரி பேட்டர்’ என்றும், `இந்தியாவின் ஏபிடி வில்லியர்ஸ்’ என்றும் அவர் தன் ரசிகர்களால் பாராட்டப்படுகிறார். ரசிகர்கள் மட்டுமில்லாமல், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறார் சூர்யகுமார் யாதவ்.

இவர்கள் எல்லோருடைய பாராட்டுக்கும் தான் தகுதியுடைய நபர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், தன்னுடைய முதல் இரண்டு டி20 சதங்களை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக, அவர்களது சொந்த நாட்டில் அடித்து காட்டியிருந்தார் சூர்யகுமார். இதேபோல இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, புதிதாக இன்னும் பல சாதனைகளை படைத்திருக்கிறார் சூர்யக்குமார் யாதவ்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி20 தொடர்களில் பங்குபெற்று விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இரண்டாவது போட்டியில் அரைசதமும், மூன்றாவது போட்டியில் டி20 கிரிக்கெட்டில் 3ஆவது சதத்தையும் பதிவுசெய்து, சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். 51 பந்துகளில் 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் விளாசி 112 ரன்கள் குவித்த சூர்யகுமார், இதற்கு முன்னர் எந்த வீரரும் டி20 கிரிக்கெட்டில் செய்யாத புதிய ரெக்கார்டை படைத்துள்ளார்.

குறைவான பந்துகளில் 1500 எடுத்த முதல் வீரர்!

45 டி20 போட்டிகளில் பங்குபெற்றுள்ள சூர்யகுமார், 43 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 46.41 சராசரியில், 180 ஸ்டிரைக் ரேட்டுடன் 1578 ரன்களை குவித்துள்ளார். அதில் 3 சதங்களும், 13 அரைசதங்களும் அடங்கும். இந்நிலையில் டி20 போட்டிகளில் வெறும் 843 பந்துகளை எதிர்கொண்டுள்ள அவர் 1500 ரன்களை கடந்து, குறைவான பந்துகளில் 1500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

குறைவான இன்னிங்ஸ்களில் அதிக ரன் அடித்த வீரர்களில் 43 இன்னிங்ஸ்களுடன் 3ஆவது இடத்தில் இருந்தாலும், குறைவான பந்துகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில், முதல் வீரராக தன்னுடைய ரெக்கார்டை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அந்தவகையில் குறைவான இன்னிங்ஸ்களில் 1500 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் விராட் கோலி, கே எல் ராகுல், ஆரோன் பிஞ்ச், பாபர் அசாம ஆகியோர் 39 இன்னிங்ஸ்களில் இதை கடந்து, முதல் இடத்தில் இருக்கின்றனர்.

150+ ஸ்டிரைக் ரேட்டில் 1500 ரன்கள் குவித்த முதல் வீரர்!

டி20 கிரிக்கெட்டில் 43 போட்டிகளை கடந்தும் சூர்யகுமாரின் ஸ்டிரைக் ரேட், 150+ஆக இருந்து வருகிறது. இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகான அவரது பேட்டிங் ஸ்டிரைக் ரே 180.34 ஆக இருக்கிறது. இந்நிலையில் 150 ஸ்டிரைக்ரேட்டிற்கு மேல் 1500 ரன்களை எட்டியை முதல் வீரர் என்ற மற்றொரு புதிய சாதனையையும் எட்டியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

ஓபனராக இல்லாமல் 3 டி20 சதங்களை அடித்த முதல் வீரர்!

டி20 போட்டிகளில் 3 சதங்களை அடித்து துவம்சம் செய்துள்ள சூர்யகுமார் யாதவ், 3 டி20 சதங்களை அடித்துள்ள க்ளென் மேக்ஸ்வெல், கோலின் முன்ரோ மற்றும் டாவிஷி ஆகியோருடன் இணைந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு முன்னிலையில் 4 சதங்களுடன் இந்தியாவின் ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே இருக்கிறார்.

ஆனால் 3 டி20 சதங்களை அடித்துள்ள மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் போது, தனித்துவமாக ஒரு சாதனையை படைத்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ். மற்ற வீரர்கள் அனைவரும் ஓபனிங் வீரராக களமிறங்கி இந்த 3 டி20 சதங்களை அடித்திருக்கின்றனர். மிடில் ஆர்டர் பேட்டராக விளையாடும் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒரு முறை ஓபனராக களமிறங்கி தான் டி20 சதத்தை அடித்திருந்தார். இந்நிலையில் ஓபனிங் வீரராக இல்லாமல் மிடில் ஆர்டர் பேட்டராக பின்வரிசையில் இறங்கி, டி20 போட்டிகளில் 3 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார் சூர்யா.

நீங்கள் சிறுவயதில் என்னுடைய பேட்டிங்கை பார்த்ததில்லைனு நினைக்குறன் - ராகுல் டிராவிட்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றதற்கு பிறகு, இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சூர்ய குமார் யாதவை நேர்காணல் செய்தார். சூர்யகுமார் யாதவின் அபாரமான ஆட்டத்தையும், கிரவுண்டின் எல்லா பக்கமும் அடிக்கக்கூடிய அவரது தனித்திறனையும் புகழ்ந்த டிராவிட், ”சூர்யகுமார் யாதவ் சிறு வயதாக இருந்தபோது என்னுடைய பேட்டிங்கையும், நான் விளையாடுவதையும் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்’ என்று கேலி செய்தார்.

ஒரு தடுப்பாட்ட வீரர், மற்றும் ஒரு அதிரடியான வீரர் என இருவேறு பரிமாணங்களை கொண்ட ஒரே வீரரை இந்திய கிரிக்கெட் தற்போது கண்டுள்ளது. டிராவிட் அந்த உரையாடலில், “என் பக்கத்தில் இங்கே ஒருவர் இருக்கிறார், அவர் சிறுவயதாக இருந்தபோது என்னுடைய டிஃபண்டிங்க் செய்யக்கூடிய பேட்டிங்கை பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். உண்மையை சொல்லுங்கள் சூர்யா நீங்கள் பார்த்ததில்லை தானே” என்று கேட்டார். அதற்கு சூர்யகுமார், ”இல்லை பார்த்திருக்கிறேன்” என சிரித்துகொண்டே பதில் சொன்னார்.

மேலும் டிராவிட் தனது உரையாடலில், ”நீங்கள் ஒரு தனித்துவமான வீரர். உங்களுக்குள் இருக்கும் அபாரமான பேட்டிங் திறமை மற்றும் தற்போதைய உங்களது பாஃர்ம் இரண்டும் உங்கள் மீது ஒவ்வொரு போட்டியிலும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு போட்டியில் நீங்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, அந்த பேட்டிங்கை பார்த்து `இதுதான் இவர் திறமை’ என்று நினைத்தால், அதற்கு அடுத்த போட்டிகளில் களமிறங்கி அதைவிட சிறப்பான ஒரு ஆட்டத்தை நீங்கள் களத்தில் நிகழ்த்தி காட்டுகிறீர்கள். இதையெல்லாம் யோசிக்கையில் உங்களுடைய சிறந்த டி20 இன்னிங்ஸை இன்னும் பார்க்கவில்லை என்றே நினைக்க வைக்கிறது. ஏனென்றால் நீங்கள் அடுத்தடுத்து எங்களுக்கு இன்னும் சிறப்பாக ஏதாவது ஒன்றை செய்து காட்டுகிறீர்கள்" என்று வியந்து பாராட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com