சவாலான இலக்கு : சாதுர்யமாக விளையாடும் இந்தியா !
இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
3-வது மற்றும் இறுதி டி20 போட்டி பிரிஸ்டோலில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி, இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. 7-வது ஓவரின் 5-வது பந்தில் கவுல் பந்துவீச்சில் பட்லர் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்திருந்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது.
அதன் பின் ஹேல்ஸ் களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி வந்த ராய், அணியின் ஸ்கோர் 103 ரன்னாக இருந்த போது சாஹர் பந்து வீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். அதில் 7 சிக்ஸர்களும், 4 பவுண்டர்களும் அடங்கும். அதன் பின் சுதாறித்துக் கொண்ட இந்திய அணி சிறப்பான பந்து வீச்சை வெளிபடுத்தியது. ஹேல்ஸ் 30 ரன்களில் வெளியேற, அதன் பின் வந்த கேப்டன் மோர்கன், மற்றும் ஸ்டோக்ஸ் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதி கட்டத்தில் அதிரடிகாட்டிய பேர்ஸ்டோவ்வையும் பாண்டியா வெளியேற்ற, அதன் பின் வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் குவித்துள்ளது.