இது கோலியின் "தர்பார்" !

இது கோலியின் "தர்பார்" !

இது கோலியின் "தர்பார்" !
Published on

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த பத்தாண்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்‌ற சாதனையை இந்தியக் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

கடந்த 10 ஆண்டு கால கிரிக்கெட்டின் சாதனைப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தால், திரும்பத் திரும்ப வரும் பெயர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில், 2008-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான கோலி, அதில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அவர், தனது முதல் சதத்தைப் பதிவு செய்ய ஓராண்டு காலம் பிடித்தது. அன்று ஆரம்பமான கோலியின் ரன் வேட்டை இன்றும் தொடர்கிறது.

2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் பெரும் பங்களிப்பை செலுத்திய அவர், கடந்த எட்டு வருடங்களில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். ஆக்ரோஷம், வ‌ளமையான ஆட்டம், துடிப்பான செயல்பாடு என எதிரணியின் தூக்கத்தை கலைக்கும் வீரராக உருவெடுத்துள்ளார்.

சாதனைகளை சர்வசாதாரணமாக முறியடித்த அதேவேளையில், சில சறுக்கல்களிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளத் தவறவில்லை. இதுவரையில் பங்கேற்ற தொடர்களில் இரண்டில் மட்டுமே அவர் சொல்லிக்கொள்ளும்படி விளையாடியதில்லை. ஒன்று, 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர். மற்றொன்று 2014-இல் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர். இவற்றைத் தவிர்த்து கோலியின் கிரிக்கெட் பயணம் ஏறுமுகத்தைத்தான் கண்டு வருகின்றது.

இங்கிலாந்து மண்ணில் 2014-ஆம் ஆண்டு திணறிய கோலி, அதே நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் இருசதங்கள் உள்பட 593 ரன்கள் குவித்து வியக்க வைத்தார். வழக்கமான கேப்டன்கள் போல் அணியை வழிநடத்துவதுடன் நின்றுவிடாமல், இந்திய அணியை பல தருணங்களில் தனது தோளில் சுமந்தும் கரையேற்றியவர் கோலி. அண்மையில் முடிந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரை இது தொடர்ந்தது. அப்போட்டியில், தனி வீரராக நின்று இலக்கை எட்டி தொடரையும் வெல்ல உதவினார்.

வேறு ஒரு உலகில் கிரிக்கெட் விளையாடுவது போல, இவருக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே மிகப்பெரிய ரன் வித்தியாசம் காணப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ஓர் பத்தாண்டில், 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் கோலி தான். அனைத்து வகையான போட்டிகளிலும் 70 சதங்களை விளாசியுள்ள கோலி, இதில் சச்சின் டெண்டுல்கர் படைத்திருக்கும் நூறு சதம் என்ற இமாலயச் சாதனையை எளிதில் முறியடிப்பார் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இளையோர் உலகக்கோப்பை இந்திய அணியின் கைகளில் தவழ அளப்பரிய பங்காற்றிய விராட் கோலி, அடுத்தடுத்த உலகக் கோப்பைத் தொடர்களில் பட்டம் வெல்ல உறுதுணையாக இருப்பார் என நம்பலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com