ஆப்கான் வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரகானே - குவியும் பாராட்டுக்கள்
ஆப்கான் டெஸ்ட் போட்டில் வெற்றி பெற்ற பின்னர் ரகானே நடந்து கொண்ட விதத்திற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்றது. இரண்டே நாளில் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பின்னர் இந்திய அணி கோப்பை உடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, கேப்டன் ரகானே திடீரென ஆப்கான் வீரர்களையும் போஸ் கொடுக்க அழைத்தார். ரகானேவின் இந்த செயலை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் ஆப்கான் வீரர்களுக்கு புரியவில்லை. பின்னர் இந்திய வீரர்களுடன் ஆப்கான் வீரர்களுடன் இணைந்து போஸ் கொடுத்தனர். ரகானே ஆப்கான் வீரர்களுடன் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டார். கோப்பையையும் அவர்களுடன் ரகானே பகிர்ந்து கொண்டார். ரகானே பண்புடன் நடந்து கொண்டது எல்லோரையும் கவர்ந்து விட்டது.
பிசிசிஐ-யும் இதுதொடர்பான வீடியோவை உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. உடனடியாக பலரும் அதனை ஷேர் செய்ய ஆரம்பித்தார்கள். பிசிசிஐ-யின் இந்த வீடியோவை பகிர்ந்து ரகானேவை புகழ்ந்து மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் மற்றும் பீட்டர்சன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.