வரலாற்றை மாற்றி எழுதிய 'கபில் அண்ட் கோ'.. ஒரு கத்துக்குட்டி சாம்பியனை சாய்த்த கதை!

மதன் லால் பந்தை மிட்விக்கெட் திசையில் ரிச்சர்ட்ஸ் தூக்கி அடிக்க, சர்க்கிளுக்குள் நின்றுகொண்டிருந்த கபில் தேவ் பின்னாலேயே சுமார் 20 மீட்டர் தூரத்துக்கும் மேல் ஓடி அந்த கேட்சைப் பிடித்தார். ஒட்டுமொத்த அரங்கும் அவரது கேட்சால் மெய்சிலிர்த்துப்போனது.
1983 world cup
1983 world cuppt web

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 13வது உலகக் கோப்பைத் தொடரான இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் சிறந்த தருணங்களை சற்று அசைபோடுவோம். இந்த எபிசோடில் நாம் பார்க்கப்போவது இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தை மாற்றிய 1983 உலகக் கோப்பை ஃபைனல் பற்றி!

1983 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா அந்த அரங்கில் வென்றிருந்தது ஒரேயொரு போட்டியில் மட்டும்தான்! 1975 உலகக் கோப்பையில் ஈஸ்ட் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வென்றிருந்த இந்தியா, மற்ற இரண்டு போட்டிகளிலும் தோற்றிருந்தது. அடுத்த தொடரிலோ 3 போட்டிகளையும் இழந்தது இந்திய அணி. அதிலும் அப்போது டெஸ்ட் அந்தஸ்து பெற்றிடாத இலங்கைக்கு எதிராகக் கூட தோற்றிருந்தது. அப்படிப்பட்ட நிலையில் தான் 1983 உலகக் கோப்பையில் பல அதிர்ச்சிகளை நடத்தியது கபில் தேவ் தலைமையிலான அணி. வெஸ்ட் இண்டீஸை வென்று அந்தத் தொடரை தொடங்கிய இந்திய அணிக்கு, கடைசி சவாலாகவும் வெஸ்ட் இண்டீஸே அமைந்தது. அனைவரையும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டிருந்த இந்திய அணியை லார்ட்ஸில் நடந்த ஃபைனலில் சந்தித்தது இரு முறை சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாய்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டே ரன்கள் மட்டும் எடுத்திருந்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை வெளியேற்றினார் ஆண்டி ராபர்ட்ஸ். 2 ரன்னுக்கே இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்திருந்தாலும், அடுத்ததாக ஜோடி சேர்ந்த கிருஷ் ஶ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத் இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ஒருசில பந்துகளில் தடுமாறினாலும், தன் வழக்கமான அதிரடி பாணியிலேயே விளையாடினார் ஶ்ரீகாந்த். அவர் அடித்த 38 ரன்களில், 28 ரன்கள் ஃபோர்கள் (7 ஃபோர்கள்) மூலமே வந்தது. இந்திய அணிக்கு மட்டுமல்ல, அந்த ஃபைனலிலேயே அவர்தான் டாப் ஸ்கோரராக விளங்கினார். ஶ்ரீகாந்த், அமர்நாத் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தனர்.

அவர்கள் இருவரும் வெளியேறிய பிறகு இந்திய மிடில் ஆர்டர் சற்று ஆட்டம் கண்டது. சந்தீப் பாடில் (27 ரன்கள்) தவிர யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. பெரும் நம்பிக்கையாக விளங்கிய கேப்டன் கபில் தேவ் அதிரடியாக ஆடினாலும் (8 பந்துகளில் 15 ரன்கள்) விரைவிலேயே வெளியேறினார். இந்திய அணி 130 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், கடைசி 3 வீரர்களும் போராடி கொஞ்சம் ரன் சேர்த்தனர். 9-11 பொசிஷன்களில் ஆடிய மதன் லால், சையது கிர்மானி, பல்விந்தர் சாந்து மூவரும் சேர்ந்து 42 ரன்கள் சேர்த்தனர். அதனால் 183 ரன்கள் எடுத்தது இந்தியா.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது மிகவும் எளிதான இலக்கு. எப்படியும் அந்த அணி ஹாட்ரிக் உலகக் கோப்பைகள் வென்றுவிடும் என்று எல்லோரும் கருதினார்கள். ஆனால் இந்தியா இன்னொரு அதிசயத்தை லார்ட்ஸில் நடத்தியது. இந்திய பௌலர்கள் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் போராடினார்கள். ஆரம்பத்திலேயே தனது அதி அற்புதமான பந்தால் கார்டன் கிரீனிட்ஜை கிளீன் போல்டாக்கினார் பல்விந்தர் சாந்து. அது இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது.

ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன் அந்த நம்பிக்கை நீடிக்க விடவில்லை. ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தும் அவர், இந்திய பௌலர்களையும் வறுத்தெடுத்தார். அவர்தான் விவியன் ரிச்சர்ட்ஸ்! டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் வெளியேறிருந்தாலும் ரிச்சர்ட்ஸ் தன் அதிரடியை விட்டுவைக்கவில்லை. அவர் இருக்கும்வரை இந்தியாவின் கனவு பலிக்காது என்றே கருதப்பட்டது. ஆனால் அது மாறியது. மதன் லால் பந்தை மிட்விக்கெட் திசையில் ரிச்சர்ட்ஸ் தூக்கி அடிக்க, சர்க்கிளுக்குள் நின்றுகொண்டிருந்த கபில் தேவ் பின்னாலேயே சுமார் 20 மீட்டர் தூரத்துக்கும் மேல் ஓடி அந்த கேட்சைப் பிடித்தார். ஒட்டுமொத்த அரங்கும் அவரது கேட்சால் மெய்சிலிர்த்துப்போனது. அதைவிட முக்கியமான விஷயம் இந்தியாவின் மிகப் பெரிய சவால் பெவிலியன் திரும்பியது. 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெளியேறியிருந்தார் ரிச்சர்ட்ஸ்.

அந்த விக்கெட் இந்திய அணிக்கு எல்லையற்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அதன்பிறகு மதன் லால், ரோஜர் பின்னி, பல்விந்தர் சாந்து என ஒவ்வொருவரும் விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். எந்த வெஸ்ட் இண்டீஸ் வீரராலும் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை. விக்கெட் கீப்பர் ஜெஃப் டூஜான், வேகப்பந்துவீச்சாளர் மால்கம் மார்ஷல் இருவரும் மட்டும் ஏழாவது விக்கெட்டுக்கு சற்றுப் போராடிப் பார்த்தனர். இருந்தாலும் அவர்களால் 43 ரன்கள் தான் சேர்க்க முடிந்தது. மொஹிந்தர் அமர்நாத் டூஜானை போல்டாக்கி வெளியேற்ற, அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சீக்கிரம் சரிந்தன. அந்த அணி 140 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி விக்கெட்டாக மைக்கேல் ஹோல்டிங்கை எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றி இந்தியாவை சாம்பியனாக்கினார் மொஹிந்தர் அமர்நாத். குரூப் சுற்றையே தாண்டாது என்று கருதப்பட்ட ஒரு அணி, இருமுறை சாம்பியனை 43 ரன்களில் வீழ்த்தி மகுடம் சூடியது.

இந்தப் போட்டியில் 26 ரன்கள் எடுத்ததோடு, 3 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஆல்ரவுண்டர் மொஹிந்தர் அமர்நாத் ஆட்ட நாயகன் விருது பெற்றார். லார்ட்ஸ் பால்கனியில் கபில் தேவ் உலகக் கோப்பையை வெல்லும் அந்தக் காட்சி இந்திய கிரிக்கெட்டின் மகத்தான தருணமாக இன்றும் விளங்குகிறது. அந்த வெற்றி பல்வேறு ரசிகர்களை, எதிர்கால வீரர்களை, ஒரு மாபெரும் கிரிக்கெட் புரட்சியை இந்தியாவில் விதைத்தது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com