''இப்ப தெரியுதா தோனியின் அருமை?'' - பறக்கும் மீம்ஸ்கள்!

''இப்ப தெரியுதா தோனியின் அருமை?'' - பறக்கும் மீம்ஸ்கள்!
''இப்ப தெரியுதா தோனியின் அருமை?'' - பறக்கும் மீம்ஸ்கள்!

தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் இன்றளவும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்து வருகிறது. ''பின்னால் தோனி கீப்பராக நிற்கும் போது கோட்டை தாண்டி செல்ல வேண்டும் என நினைக்கூடாது, அப்படி நினைத்தாலும் பந்தை தோனி வசம் செல்லவிடக்கூடாது. ஒருவேளை சென்றுவிட்டால், திரும்பி பார்க்காமல் பெவிலியனை நோக்கி நடக்க தொடங்கிவிடலாம்'' என்று  ரசிகர்கள் கிண்டலாக பதிவிடுவார்கள். அது உண்மையும் கூட.

எத்தனையோ ஸ்டெம்பிங்களை தோனி கண் இமைக்கும் நேரத்தில் செய்திருக்கிறார். அப்படி ஒரு ஸ்டெம்பிங்க் நேற்றைய இந்திய அணிக்கு தேவைப்பட்டது. சரியான நேரத்தில் எடுக்கப்படாத விக்கெட் ஆட்டத்தின் மொத்த போக்கையே மாற்றிவிடும் என்பதற்கு நேற்றைய போட்டியே சாட்சி. 

நேற்றைய இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் தோனி விளையாடவில்லை. ஆனால் நேற்று முதல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் தோனி. அவர் இல்லாத மைதானத்திலும் 'தோனி தோனி' என்ற ரசிகர்களின் குரல் எதிரொலித்தது. நேற்றைய போட்டியின் போக்கையே மாற்றியது ஆஸ்திரேலிய அணி வீரர் டர்னரின் ஆட்டம் தான். அவரை எளிதாக ஸ்டெம்பிங்கில் வெளியேற்றி இருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பை விக்கெட் கீப்பர் பன்ட் தவறவிட்டார். அந்த கணத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே மைதானத்தில் இல்லாத தோனியைத்தான் நினைத்துக்கொண்டார்கள் என்பது உண்மை. 

358 ரன்கள் எடுத்தும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி எழுந்துவிட்டனர். தோனியை பாராட்டியும், தோனி இல்லாத இந்திய அணியின் நிலைமை இது தான் என்றும் தொடர்ந்து பதிவுகளை அள்ளிவீசத் தொடங்கினர்.

தோனியின் இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லை என்று கூறி தங்கள் பார்வையை ரிஷப் பன்ட் பக்கம் திருப்பினர் பல ரசிகர்கள். தோனிக்கு ஆதரவாகவும், பன்டை கலாய்த்தும் மீம்ஸ்கள் பறக்கத்தொடங்கின. 

தோனியின் இல்லாமையை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய வீரர்கள் கூட நேற்று உணர்ந்திருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும். நேற்றைய ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், ''இது போன்ற நேரங்களில் தான் ஸ்டம்பிங்கிற்கு தோனியின் அவசியத்தை இந்தியா உணரும்'' என தெரிவித்தார். ஆட்டம் முடிந்தவுடன் கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ''முக்கிய ஸ்டம்பிங்க் வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம். ஃபீல்டிங்கிலும் நாங்கள் தோல்வியடைந்தோம்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்திருந்த சுனில் கவாஸ்கர், ''தோனியை அணியின் கீப்பராக பெற்றிருப்பது விராட் கோலிக்கு ஆரோக்யமான ஒன்று என்றும் விராட் கோலி தடுமாறும் போதெல்லாம் தோனி அவருக்கு உதவுவார்'' என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே பன்டுக்கு ஆதரவாகவும் பதிவுகள் பதிவிடப்பட்டன. தவறுகள் இழைப்பது சகஜம் தான் என்றும், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பன்ட் தனது விளையாட்டை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் பதிவிட்டனர். 

வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சியாகவே இந்த ஆஸ்திரேலிய தொடர் பார்க்கப்படுகிறது. இங்கு கற்றுக்கொள்ளப்படும் அனுபவத்தை இந்திய அணி கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அப்படியானால் தோனியின் தேவையை இந்தியா தற்போது உணர்ந்திருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com