"இப்படியாக உலக டெஸ்ட் சாம்பியனை தேர்வு செய்வது சரியல்ல" - ரவி சாஸ்திரி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்வது எந்த அணி என்பதை முடிவு செய்வதற்கு மூன்று போட்டிகளை வைத்திருக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்குபெற இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேற்று குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். அதற்கு முன்பாக கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய ரவி சாஸ்திரி " இரண்டரை ஆண்டுகள் நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியை 3 ஆட்டங்களாக நடத்தியிருக்க வேண்டும். ஒரே ஆட்டத்தின் மூலம் வெற்றியாளரை தீர்மானிப்பது சரியல்ல. வருங்காலத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து நடத்த விரும்பினால், இறுதிப்போட்டியை 3 ஆட்டங்கள் கொண்டதாக நடத்துவதே சிறந்தது" என்றார் அவர்.
மேலும் பேசிய அவர் " இப்போது முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இது மிகப்பெரிய போட்டியாக இருக்கப்போகிறது. டெஸ்ட் கிரிக்கெட்தான் உங்களது உண்மையான திறமையை சோதிக்கும் ஒன்றாக இருக்கும். இது ஒன்றும் மூன்று அல்லது மூன்றரை மாதங்களில் நடந்து முடிந்துவிடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதி இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிச்சுற்றை எட்டியுள்ளன" என்றார் ரவி சாஸ்திரி.