“தோனி ஃபிட்டாக இருந்தால் மற்றவர்கள் குறித்து யோசிக்கத் தேவையில்லை”-வாசிம் ஜாஃபர்
தோனி நல்ல உடல்தகுதியுடனும் ஃபார்முடனும் இருந்தால் அவரை விட வேறு ஒருவரை நாம் அணியில் சேர்ப்பது குறித்து யோசிக்க தேவையில்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மார்ச் 29-ஆம் தேதி தொடங்கயிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா தாக்கம் தொடர்ந்து இருந்தால் ஐபிஎல் தொடர் முழுவதுமாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை என்ன ஆகும் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். தோனி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் விளையாடவுள்ளது ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்திறனை பார்த்துதான் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அவரை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தோனியை இந்திய அணியில் சேர்த்தால் அவரை எந்த இடத்தில் இறக்குவீர்கள் என்று வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியிருந்தார். டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் கூறியிருந்தார். அத்துடன் தோனி இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பில்லை என்று சூசகமாக தனது கருத்தை முன்வைத்து இருந்தார். இவரை தவிர முன்னாள் வீரர்கள் பலரும் தோனியின் நிலை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இப்போது ரஞ்சி கிரிக்கெட்டின் ஜாம்பவானான வாசிம் ஜாஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தொன்றை தெரிவித்துள்ளார் அதில் "தோனி நல்ல உடற்தகுதியுடனும் ஃபார்முடன் இருந்தால் அவரை விட வேறு ஒரு வீரரை அணியில் சேர்ப்பது குறித்து யோசிக்க தேவையில்லை. ஸ்டம்புக்கு பின்னால் தோனி நிற்பது அணிக்கு மிகப் பெரிய பலம், மேலும் அவர் கடைசி ஓவர்களில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். மேலும் தோனியை அணியில் சேர்ப்பதன் மூலம் ராகுலின் சுமை குறையும், தேவைப்பட்டால் ரிஷப் பன்ட்டையும் பேட்ஸ்மேனாக சேர்த்துக்கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.